வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சற்று முன்பு போனஸ் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2.60 லட்சம் பணியாளர்கள் பயன்: 367.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் திறன்மிக்க செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,60,497 தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதற்காக மாநில அரசு சார்பில் 367 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியாக வழங்கப்படும் போனஸ் வி விவரங்கள்:
ஊதியச் சட்டத் தொகுப்பு 2019-ன் படி கணக்கீட்டு உச்சவரம்புகள் தளர்த்தப்பட்டு, அனைத்து தகுதியுள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கும் பின்வருமாறு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது:
இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள்:
ஒதுக்கக்கூடிய உபரித் தொகையைக் கொண்டு 8.33% மிகை ஊதியம் + 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்.
மின்சாரம், போக்குவரத்து & நுகர்பொருள் வாணிபக் கழகங்கள்:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வழங்கப்படும்.
உபரித் தொகை இல்லாத நிறுவனங்கள்:
இலாப உபரி இல்லாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியம் + 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வழங்கப்படும்.
வீட்டுவசதி வாரியம் & குடிநீர் வாரியங்கள்:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.
தற்காலிகத் தொழிலாளர்கள்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.
பயனடையும் தொகை அளவு:
இந்த அறிவிப்பின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சமாக ரூ.16,800/- வரை மிகை ஊதியமாகப் பெறுவர். மேலும், பல்வேறு கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான தனி ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கூடுதல் ஊக்கத்துடன் செயல்படவும், தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் வழிவகுக்கும் என அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





