தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை, கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று (ஜூலை 15) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையேயான ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக முதல்வர் அலுவலகம் (CMO) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையின் போது, கேரள அரசு போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக தீவிரமாக மேற்கொண்டு வரும் “ஆபரேஷன் டூஃபான்” (Operation Toofan) என்ற சிறப்பு ஒழிப்பு நடவடிக்கையில், தமிழக அரசும் இணைந்து கூட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு மாநில எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது மற்றும் இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கேரள அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் விஜய் மிக விரைவில் கேரள மாநிலத்திற்குப் அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, கேரள அரசின் சார்பில் மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையின் அக்மார்க் நாவலான “கயிறு” முதல்வர் விஜய்க்குப் பரிசாக வழங்கப்பட்டது.

இரு மாநில நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் (MP) பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் தமிழக அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.