தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தும் நோக்கில், தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் அதிநவீன "விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CDF)" அமைக்கப்படவுள்ளது.
இதற்காகத் தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (TIDCO) மற்றும் மத்திய அரசின் 'இன்-ஸ்பேஸ்' (IN-SPACe) நிறுவனத்திற்கும் இடையே கடந்த வாரம் குஜராத்தில் கையெழுத்தான சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்த நகலை, தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா மற்றும் உயர்தர அதிகாரிகள் இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். தென் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
கடந்த 11.6.2026 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 10-வது 'இன்-ஸ்பேஸ்' தொழில் மாநாட்டின் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் முனைவர் தா. கார்த்திகேயனும், இன்-ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் அதன் இணைச் செயலாளர் திரு. அனுபம் ஆனந்த், இ.ஆ.ப.-வும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் இஸ்ரோ தலைவர் முனைவர் வி. நாராயணன் மற்றும் இன்-ஸ்பேஸ் தலைவர் முனைவர் பவன் கோயங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
மாநிலத்தில் விண்வெளி உற்பத்திக்கான உலகத்தரச் சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்த ஒப்பந்தம் மிக முக்கிய மைல்கல்லாகும்.
மத்திய அரசின் பங்களிப்பு: இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய அரசின் IN-SPACe நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன விண்வெளி உபகரணங்களை வழங்கும்.
தமிழக அரசின் பங்களிப்பு: இத்திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை வழங்கி, அதில் உலகத்தரம் வாய்ந்த கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும்.
குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய ஏவுகணை தளம் அருகில் அமையவிருக்கும் இந்த தொழிற்பூங்காவில் பின்வரும் அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகள் இடம்பெறவுள்ளன:
அதிர்வு மற்றும் அதிர்ச்சிச் சோதனை (Vibration & Shock Testing)
வெப்ப-வெற்றிடச் சோதனை (Thermal-Vacuum Testing)
மின் சார்ந்த குறுக்கீடு/ஒத்திசைவு (EMI/EMC)
அழுத்தம் மற்றும் ஓட்டம் சோதனை (Pressure and Flow Testing)
ஏவுகணை வாகனக் கூட்டமைப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் ஒருங்கிணைப்பு
ஹைட்ரோக்ளோவ் செயல்பாடுகள் (Hydroclave operations)
இத்தகைய அதிக முதலீட்டுடன் கூடிய சோதனை வசதிகள் ஒரே இடத்தில் உருவாக்கப்படுவதால், தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களின் உதிரிபாகங்களைச் சோதிக்க ஆகும் செலவும், கால விரயமும் பெருமளவில் குறையும்.
தென் தமிழகத்தில் தொழில் புரட்சி
குலசேகரப்பட்டினம் ஏவுகணை தளத்தின் அருகாமையில் அமையவுள்ள இந்த விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்கா, ஏவுகணை வாகனக் கூறுகள், செயற்கைக்கோள் அமைப்புகள், இயக்க அமைப்புகள், வான்வழி மின்னணு அமைப்புகள் (Avionics) மற்றும் ஒருங்கிணைந்த பொருள் கட்டமைப்புகளை உற்பத்தி செய்யும் முதன்மை மையமாக விளங்கும்.
தனியார் முதலீடுகளை ஈர்ப்பதுடன், தென் தமிழகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும். மேலும், உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் போட்டித்திறனை உயர்த்துவதோடு, உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவிற்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் முக்கியப் பங்களிப்பாக இது அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





