தமிழக அரசு அறிவித்துள்ள த.வெ.கவின் தேர்தல் வாக்குறுதியான 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக' ஆண்டுதோறும் 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. த.வெ.கவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளிலும், எஞ்சிய 44 சதவீத பிறப்புகள் தனியார் மருத்துவமனைகளிலும் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்திற்கு கூட ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலும், சிசேரியன் (அறுவை சிகிச்சை) முறை எனில் ரூ.2.5 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தங்களின் தாய்-சேய் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய சூழல் உள்ளது.

விசிக தலைவர் தொல். திருமாவளவனின் மாற்றுத் திட்டம்: "தங்க மோதிரம் வழங்குவதற்காகச் செலவிடப்படும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்க வேண்டும். மேலும், அதற்குத் தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமித்தால் அது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிரந்தரப் பயன் அளிப்பதாக அமையும்."

மோதிரம் சில மாதங்களில் பொருந்தாமல் போகும்:

மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் தங்க மோதிரமானது, குழந்தைகள் வளர வளர ஒரு சில மாதங்களிலேயே அவர்களின் கைகளுக்குப் பொருந்தாமல் போய்விடும்.

எனவே, தற்காலிகப் பயன் தரும் இந்தத் திட்டத்தை விடுத்து, அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.