அதிமுகவைச் சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் தலைமை ஏன் அமைதி காக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் இதுதொடர்பாகப் பேசியதாவது:

அதிமுக தலைமை அமைதி காப்பதன் பொருள் என்ன?"

"என்ன காரணத்துக்காக அதிமுகவிலிருந்து விஜயபாஸ்கர் வெளியேறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவிலிருந்து ஆள்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடைபெறுகிறது என்ற விவாதம் ஒருபுறம் இருக்கிறது. ஆனால், அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கின்றனர்?"

தொடர்ந்து பேசிய அவர், தவெகவின் செயல்பாடுகளுக்கு எதிராக அதிமுக தலைமை வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். "தவெகவுக்கு எதிராக ஆவேசப்பட வேண்டிய, கொந்தளிக்க வேண்டிய அதிமுக தலைவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாகச் செய்கிறார்களே தவிர, இதனை ஒரு மக்கள் கருத்தாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை" என்று சாடினார்.

"எங்களிடம் கேட்டுப் பயனில்லை"

'எங்கள் கட்சியைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள், இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்ற குரல் கூட அதிமுக தலைவர்களிடத்தில் எழவில்லை என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், இதுகுறித்த கேள்விகளைச் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமே கேட்க வேண்டும் என்றார்.

"தவெக, திமுக போன்றவை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றால் அது அவர்களின் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. இதனால் அதிமுக பாதிப்படைகிறது என்றால் இது அதன் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. அதைத் தவிர்த்து, இடையில் உள்ள எங்களிடம் கேள்வி கேட்பதில் எந்தப் பயனும் இல்லை" என்று திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், அக்கட்சியின் தலைமை காட்டும் மௌனம் குறித்து திருமாவளவன் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.