திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய வந்தவர்களிடம், முகக்கவசம் அணிந்து மாறுவேடத்தில் வந்த அமைச்சரிடமே ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள சம்பவம் தமிழக ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதலே, பல்வேறு முக்கிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் பொதுமக்களிடம் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இன்று அதிகாலை, கோயில் அதிகாரிகள் யாருக்கும் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்தார். தனது காரைக் கோயில் வளாகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு, முகக்கவசம் அணிந்து அடையாளம் தெரியாதவாறு தனது உதவியாளருடன் கோயிலுக்குள் சென்றார்.

அங்கு, விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்குமாறு தனது உதவியாளரை அமைச்சர் அனுப்பியுள்ளார்.

அங்கு வந்தவர்கள் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் என்று அறியாத அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள், தலைக்கு தலா 1,000 ரூபாய் வீதம், அங்கு நின்ற 4 பேருக்கு மொத்தம் ரூ. 4,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

"தற்போது தன்னிடம் ரொக்கப் பணம் இல்லை" என்று அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அர்ச்சகரின் ஜி-பே (G-Pay) எண்ணிற்கு கூகுள் பே மூலம் ரூ. 4,000 பணத்தை அமைச்சர் அனுப்பியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை கையில் வைத்தபடி, தான் யார் என்பதை வெளிப்படுத்தி அர்ச்சகர்களையும், ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்தார்.

இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களை வரவழைத்து, கோயில் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் இருந்து விளக்கக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் எழுதி வாங்கியுள்ளார்.

தற்போது, திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், மாதாந்திர மற்றும் வருடாந்திர வருவாய் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமைச்சர் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இந்த முழுமையான ஆய்வுப் பணிகள் நிறைவடைய நாளை பிற்பகல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் அரங்கேறி வரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து, சென்னை திரும்பியதும் துறைச் செயலாளருடன் அவசர ஆலோசனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.