தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (செப். 28) மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி இடம் திடீர் மாற்றம் முதலில் உசிலம்பட்டியிலும், பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தாய்-சேய் வார்டிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விழா, தொற்று பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கிற்கு திடீரென மாற்றப்பட்டது. கூட்டரங்கில் மேடை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன.
முதல்வரின் இன்றைய பயணத் திட்டம்:
காலை 09:00 மணி: சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை வருகை.
பகல் 12:00 மணி: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பிற்பகல்: ரூ. 10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து, காந்தியடிகளின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களைப் பார்வையிடுகிறார்.
மாலை 04:30 மணி: அரசு விருந்தினர் மாளிகை ஓய்வுக்குப் பின், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
மாலை 06:00 மணி: தரிசனத்தை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
5,000 போலீசார் பாதுகாப்பு முதல்வர் வருகையையொட்டி, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நகரின் முக்கியச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) ஏற்பாடு செய்துள்ளனர்.





