தமிழகத்தில் சனிக்கிழமை (செப். 26) முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மழைக்கான வாய்ப்பு:
செப். 26 (சனிக்கிழமை): மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப். 27 - அக். 1: மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதி நிலவரம்: நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (கடந்த 24 மணி நேரம்): மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் கூடலூா் மற்றும் கூடலூா் சந்தைப் பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.





