பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக நடமாடும் உரிமையை உறுதி செய்யும் வகையில், வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள் மற்றும் ஆபத்தான தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் முதன்முறையாக அனுமதி அளித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தெரு நாய் கடியால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது குறித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) எடுத்த வழக்கின் விசாரணையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கியது. கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் இத்தீர்ப்பை எழுதினர்
அடிப்படை உரிமை மீறல்: அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது, நாய் கடி தாக்குதல்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும்.
நிர்வாகத் தோல்வி: போதிய நிதி ஒதுக்கீடு இன்றி, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டுச் செயல்திட்டம் சீரற்று உள்ளது. இந்த நீண்டகால செயலற்றத் தன்மையே தற்போதைய தீவிரப் பிரச்சனைக்குக் காரணம்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்: ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் தெரு நாய் கடி சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது குடிமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அரசு மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகவும் உள்ளது.
அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்டமேனிக்கு நாய்களைக் கொல்லக் கூடாது என எச்சரித்துள்ள நீதிமன்றம், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டும் கருணைக் கொலை செய்ய கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது:
யாரைக் கருணைக் கொலை செய்யலாம்?: நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உள்ள பகுதிகள், அடிக்கடி ஆக்ரோஷமான தாக்குதல்கள் நடக்கும் இடங்களில் உள்ள வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத நோய் பாதித்த நாய்கள் மற்றும் ஆபத்தான தெரு நாய்கள்.
யார் தீர்மானிப்பது?: சட்டரீதியிலான வழிமுறைகளைப் பின்பற்றி, கால்நடை மருத்துவ நிபுணர்களின் முறையான மதிப்பீட்டிற்குப் பின்னரே கருணைக் கொலை செய்யப்பட வேண்டும்.
சட்ட விதிமுறைகள்: விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் சட்டம் 1960, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் 2023 ஆகிய சட்டங்களுக்கு உட்பட்டே இந்நடவடிக்கை இருக்க வேண்டும்.
பிரத்யேகக் காப்பகங்கள்: பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு, மீண்டும் அவற்றை தெருக்களில் விடக் கூடாது. அவற்றுக்கென பிரத்யேக காப்பகங்கள் அமைத்துப் பராமரிக்க வேண்டும்.
கால்நடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் திரியும் மாடு உள்ளிட்ட பிற கால்நடைகளையும் பிடித்துக் காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு: இந்திய கால்நடை நல வாரியத்தின் வழிகாட்டு நடைமுறையின் (SOP) படி, அனைத்து மாவட்டங்களிலும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். வெறிநாய் கடி தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறும்பட்சத்தில், அதனை உச்சநீதிமன்றம் மிகவும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.





