பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய நகைச்சுவை இணையத் தொடரான 'சூப்பர் சுப்பு' (Super Subbu) நாளை (ஜூலை 2) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மாலிக் ராம் இயக்கத்தில் முற்றிலும் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த வேலையும் சரியாக அமையாமல் தடுமாறும் இளைஞனான சுப்புவுக்கு (சந்தீப் கிஷன்), எதிர்பாராத விதமாக ஒரு அரசு வேலை கிடைக்கிறது. அதுவும் பழமைவாதமும், அதிக மக்கள் தொகையும் கொண்ட ஒரு கிராமத்தில் 'பாலியல் கல்வி' (Sex Education) கற்பிக்கும் ஆசிரியர் வேலை. பாலியல் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே கூச்சப்படும் அந்த கிராமத்து மக்களிடம், ஆசிரியர் சுப்பு எப்படி இந்தத் தலைப்பைக் கொண்டு சேர்க்கிறார், அங்கு அவர் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் சந்தீப் கிஷனுடன் இணைந்து மிதிலா பல்கர், முரளி சர்மா, கெட்அப் சீனு மற்றும் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் சுப்பு' இணையத் தொடர் மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்டுள்ளது. இந்த 7 எபிசோடுகளும் நாளை (ஜூலை 2) பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) நேரடியாக வெளியாகிறது.

மூல மொழியான தெலுங்கில் உருவாகியுள்ள இத்தொடர், தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நாளை முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.