சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பிலிருந்து விலகியது குறித்து நிலவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு இயக்குநர் சுந்தர். சி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் - சுந்தர். சி கூட்டணி முதன்முறையாக இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்தத் திட்டத்திலிருந்து சுந்தர். சி விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சுந்தர். சி அதற்கான உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசிய சுந்தர். சி தெரிவித்ததாவது:

"எனக்கும் ரஜினி சார் அல்லது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே எந்தவிதமான மனக்கசப்பும் கிடையாது. அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு."

ரஜினி சார் போன்ற ஒரு பெரிய ஆளுமையுடன் இணையும்போது, மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும். அந்த எதிர்பார்ப்பை என்னால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் என்னுள் இருந்தது."

கடந்த 16 ஆண்டுகளாக என்னுடைய படங்களைப் பார்த்தால் தெரியும், அவை மிகவும் எளிமையான கதைக்களத்தைக் கொண்டவை. அந்தப் பாணியில் வேலை செய்யவே எனக்குப் பிடிக்கும். ரஜினி சாருக்காக நான் சமரசம் செய்துகொண்டால், அது என்னுடைய படமாக இருக்காது என்ற குழப்பம் ஏற்பட்டது

இந்தக் குழப்பங்கள் மற்றும் தயக்கங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்திடமும், தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸிடமும் வெளிப்படையாகப் பேசியதாகச் சுந்தர். சி கூறியுள்ளார். தனது இயல்பான பாணியில் இருந்து மாற விரும்பாததாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுந்தர். சி விலகியதைத் தொடர்ந்து, ரஜினி 173 திரைப்படத்தை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார் என்பது குறித்த ஆவலும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.