சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பாடகி கெனிஷா, தற்போது மலையாளத் திரையுலகில் பின்னணிப் பாடகியாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கத்தில், பிரபல மலையாள நடிகர் சன்னி வெய்ன் (Sunny Wayne) கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'மட்ஃபிஷ்'. இத்திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியப் பாடல் ஒன்றை கெனிஷா பாடியுள்ளார். இதனைத் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையிலும், கெனிஷா தனது இசைப்பயணத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவது இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக, நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக 2024 செப்டம்பரில் அறிவித்தனர். இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இரு தரப்பினரும் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இதற்கிடையே, அண்மையில் ரவி மோகனும் ஆர்த்தியும் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி - கெனிஷா தொடர்பான பழைய விவாதங்கள் மீண்டும் இணையத்தில் தீவிரமடைந்தன.
தொடர்ச்சியாக எழும் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறி, பாடகி கெனிஷா நடிகர் ரவி மோகனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக அண்மையில் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகக் கூறப்பட்டது.
இந்தத் தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், கெனிஷா மலையாளத் திரையுலகில் பாடகியாகத் தடம் பதித்திருப்பது அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.





