தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக சீருடை மற்றும் சின்னம் (லோகோ) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அதிரடி உத்தரவிட்டாா். அதன்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இப்படையில் முதல் கட்டமாக ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் காவல் கண்காணிப்பாளாா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்தப் புதிய அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி அவர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டு, பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்

பிற போலீஸாரிடமிருந்து இந்த அதிரடிப்படையினரைத் தனித்துவமாகக் காட்டும் வகையில் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னத்தில் தைரியம், வேகம் மற்றும் அறிவுத்திறனைப் பறைசாற்றும் விதமாக சிங்கத்தின் முகம் கம்பீரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த பிரத்யேகச் சீருடை, அதிரடிப்படை போலீஸாா் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் வடிவமைப்பு:

  • சட்டை: கரு நீல வண்ணம் (Dark Blue)

  • பேண்ட்: காக்கி நிறம் (Khaki)

  • தொப்பி & பெல்ட்: கருப்பு நிறம் (Black)

முக்கியத் தகவல்: 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படைக்கான பிரம்மாண்ட தொடக்க விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.