தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" பிரிவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூன் 9) முறைப்படி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த அதிரடிப் படை பிரிவை அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றபோது, ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் முதற்கட்டமாகக் கையொப்பமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சிங்கப் பெண் அதிரடிப் படைக்காக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, இந்தப்படைக்காக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெண்களின் பாதுகாப்பை அதிநவீன முறையில் உறுதி செய்ய ரோந்து வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் இப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன."
மாநிலத்தில் ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பிற்காக இயங்கி வரும் காவல் அமைப்புகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அதிரடிப் படையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் முன்பே, அதைத் தடுத்து நிறுத்தும் முப்பரிமாணப் படையாக இது செயல்படும்.
இந்தியாவின் முதல் முயற்சி: இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இத்துறையின் கீழ் டிரோன் (Drone) வாயிலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மகளிர் காவல் நிலையங்களின் சுமை குறையும்: இந்த சிறப்புப் படை ரோந்து மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை கவனித்துக் கொள்வதால், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் முழு கவனம் செலுத்த முடியும்.
பெண்களை பின் தொடர்வது (Eve-teasing), பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல், கடத்தல் முயற்சிகள், பொது இடங்கள், பேருந்துகள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றைத் தடுப்பதில் இந்த "சிங்கப் பெண் அதிரடிப் படை" முதன்மையான களப்பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டுப் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை இந்த அரசு நன்கு அறிந்து வைத்துள்ளது. அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம். பெண்களுக்குப் பாதுகாப்பும், கண்ணியமுமே மிக முக்கியம்; அதனைப் பாதுகாக்க இந்த அரசு என்றும் உறுதியோடு இருக்கும்" என முதல்வர் விஜய் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.





