இன்றைய அரசியல் களம் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டதாலும், வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணங்களினாலும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
"இன்றைய அரசியலில் நேர்மைக்கு இடமில்லை"
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சித்தராமையா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவது குறித்து மனம் திறந்தார்.
"வருணா தொகுதி மக்கள் என்னை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் நான் போட்டியிட்டபோது தொகுதி மக்களே நிதி திரட்டி என்னை வெற்றி பெற வைத்தனர். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கும் சூழல் உருவாகிவிட்டது." - சித்தராமையா
50 ஆண்டுகால அரசியல் பயண நிறைவு:
தனது முடிவிற்கான காரணங்களை விளக்கிய அவர், "எனக்கு தற்போது 79 வயதாகிறது. 2028 தேர்தல் வரும்போது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பைப் போல வலுவாக இல்லை. 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராகத் தொடங்கிய எனது அரசியல் பயணம், 2028-இல் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல வெற்றி தோல்விகளைக் கண்டிருந்தாலும், எனது கொள்கைகளுக்கோ மனசாட்சிக்கோ விரோதமாகச் செயல்படவில்லை என்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு" எனக் குறிப்பிட்டார்.
மக்களுக்கான குரலாகத் தொடர்ந்து இயங்குவேன்:
தேர்தல் அரசியலில் இருந்து மட்டுமே விலகுவதாகவும், பொது வாழ்க்கையில் தொடர்ந்து நீடிப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கர்நாடக மக்கள் கடந்த 50 ஆண்டுகளாகத் தன் மீது காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்த அவர், மீதமுள்ள வாழ்நாளை மக்களின் துயரங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் குரல் கொடுக்கும் பொதுச்சேவையில் அர்ப்பணிக்கப் போவதாகக் கூறி உரையை நிறைவு செய்தார்.





