திரையரங்குகளில் சாமியாடுபவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ளுங்கள்: 'கருப்பு' பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!
சென்னை: இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பத்தில் கடந்த மே 14 அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. நாட்டார் தெய்வமான கருப்புசாமியின் கதையை மையமாகக் கொண்டு உருவக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ. 147 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பல திரையரங்குகளில் படம் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், திரையரங்குகளில் சாமியாடும் நபர்களிடம் பொதுமக்கள் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"கருப்பு படத்தை திரையரங்குகளுக்கு வந்து பார்த்த அனைவருக்கு நன்றி. நீங்கள் படத்தின் மீது காட்டிய அன்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது.
தமிழ்நாடு முழுவதும் படம் பார்த்த மக்கள் பலரும் ஆர்பரித்தது, அழுதது மட்டுமின்றி பல இடங்களில் சினிமாவைத் தாண்டிய ஒன்றை அனுபவித்ததைப் போன்று உணர்ச்சிவசப்பட்டதாகவும் பல கதைகளை கேட்டு வருகின்றோம். சிலர் திரையரங்குகளில் சாமியாடியதையும் பார்த்தோம். எங்களைப் பொறுத்தவரை இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் இது.
இந்த அன்புடன் சேர்த்து எனது சிறிய வேண்டுகோள். திரையரங்குகளில் உங்கள் இருக்கைக்கு அருகில் அமர்ந்துள்ளவர்கள் சாமியாடினால் அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள திரையரங்கப் பணியாளர்களிடம் தகவல் கூறுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் காட்டும் கருணை ஒரு புனிதச் செயலைப் போன்றது."
பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திரையரங்க நிர்வாகங்களுக்கும் ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், "தமிழகம் முழுவதுமுள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், இதுபோன்ற தருணங்களுக்கு ஏற்றவாறு உங்கள் பணியாளர்களைத் தயாராக வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெறும் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி, மக்களின் உணர்வுகளோடு கலந்த ஒன்றாக மாறியுள்ளதற்கு படக்குழுவினர் தங்களது நெகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.





