வானியல் ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, சுமார் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய 'புளு மைக்ரோ மூன்' (Blue Micro Moon) வான் நிகழ்வு இன்று (மே 30) இரவு வானில் தோன்றவுள்ளது.
இந்தியாவில் வானிலை மேகமூட்டம் இன்றித் தெளிவாக இருக்கும் பட்சத்தில், இதனைப் பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புளு மூன்' என்றால் என்ன?
பொதுவாக, சந்திரன் புவியைச் சுற்றி வர 29.5 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி (முழு நிலவு) தோன்றுவது வழக்கம். ஆனால், ஆங்கில மாதங்கள் 30 அல்லது 31 நாள்களைக் கொண்டிருப்பதால், ஏற்படும் நாள்களின் வித்தியாசத்தால் அரிதாக ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதுண்டு.
அவ்வாறு ஒரே ஆங்கில மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி 'புளு மூன்' என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். நடப்பு மே மாதத்தில், ஏற்கனவே மே 1-ஆம் தேதி ஒரு பௌர்ணமி வந்த நிலையில், இன்று (மே 30) இரண்டாவது பௌர்ணமி வருகிறது.
குறிப்பு: 'புளு மூன்' என்பதால் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தமல்ல. ஒரே மாதத்தின் இரண்டாவது பௌர்ணமியைக் குறிக்கவே இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.
'மைக்ரோ மூன்' என்றால் என்ன?
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும்போது பூமிக்கு மிக நீண்ட தொலைவில் (சுமார் 2,52,360 மைல் அல்லது 4,06,135 கி.மீ தூரத்தில்) நிலவு செல்லும்போது, அது வழக்கமான பௌர்ணமி நிலவை விட 6% சிறியதாகவும், 10% மங்கலாகவும் காட்சியளிக்கும். இதுவே 'மைக்ரோ மூன்' எனப்படுகிறது.
(பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது 'சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும். அதைவிட இந்த மைக்ரோ மூன் 14% சிறியதாக இருக்கும்).
27 ஆண்டுகளுக்குப் பின் இணையும் 'புளு மைக்ரோ மூன்'
'புளு மூன்' மற்றும் 'மைக்ரோ மூன்' ஆகிய இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் இணைந்து தோன்றுவது தான் 'புளு மைக்ரோ மூன்' எனப்படும் அதிஅரிய நிகழ்வாகும்.
இதற்கு முன்னதாக, கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்த நிகழ்வு கடைசியாகத் தோன்றியது.
தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மே 30) மீண்டும் தோன்றுகிறது.
எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
நேரம்: இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் பகுதிகளில் இன்று (மே 30) மாலை / இரவு நிலவு உதிக்கும் போது இந்த அதிசயத்தைக் காண முடியும்.
நிறம்: நிலவு உதிக்கும் போது வளிமண்டல ஒளியின் சிதறல் காரணமாக வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற - ஆரஞ்சு நிறத்தில் பெரிதாகக் காட்சியளிக்கும். பின்னர் வானில் மேலே செல்லச் செல்ல வழக்கமான பிரகாசமான வெள்ளை நிறத்திற்கு மாறும்.
அடுத்த நிகழ்வு எப்போது?
இன்றைய நிகழ்வைத் தவறவிட்டால், உலகின் சில பகுதிகளில் மீண்டும் இதுபோன்றதொரு அரிய புளு மைக்ரோ மூன் நிகழ்வைக் காண 2053 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இன்று இரவு வானில் தோன்றும் இந்த அதிசய வான்விருந்தைத் தவறவிடாமல் பார்க்குமாறு வானியல் ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




