நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் MP ஞாயிற்றுக்கிழமை (அக். 4) தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்குச் சென்ற மத்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைபிடித்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லை விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் இந்த அராஜகத்தைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் மௌனம் காத்து வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் உடனடியாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருநாட்டுப் பேச்சுவார்த்தைகள் மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இனியும் விளம்பர அரசியலில் ஈடுபடாமல் மீனவர்களின் பாதுகாப்புக்கு உடனடியாக ஒரு நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.





