தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85), இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தமிழ் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அடையாறு மேம்பாலப் பகுதிக்கு வந்த கே. ராஜன், எதிர்பாராத விதமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கே. ராஜனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'பிரம்மசாரிகள்' (1983) திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே. ராஜன். தொடர்ந்து, 'நம்ம ஊரு மாரியம்மா' உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்காகவும், நலிவடைந்த தொழிலாளர்களுக்காகவும் தொடர்ந்து மேடைகளில் குரல் கொடுத்து வந்தவர்.
சினிமா மேடைகளில் நடிகர்களின் சம்பள உயர்வு, தியேட்டர் கட்டணங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் குறித்து எவ்வித ஒளிவுமறைவுமின்றி, மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகப் பேசும் குணம் கொண்டவர். இதனால் சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் பிரபலமானார்.
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், திரைப்பட ஃபைனான்சியராகவும் செயல்பட்டு வந்தார்.
தயாரிப்பு மற்றும் இயக்கம் மட்டுமின்றி, அண்மைக்காலமாகத் தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வந்தார். குறிப்பாக, பாம்பு சட்டை, அஜித் நடித்த துணிவு, மற்றும் செல்வராகவன் நடித்த பகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
மனதில் பட்டதை தைரியமாகப் பேசி, பலருக்கும் உதவி செய்து வந்த ஒரு மூத்த ஆளுமை, 85 வயதில் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணமோ மேலோங்கும்போது, மாநில அரசின் உதவி மைய எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனைகளைப் பெறலாம்.





