கேரளா இலக்கிய விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது ஆந்திர மாநில பாஜக தலைவர் பானுபிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளா இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணக் கதையை நவீன காலத்திற்கு ஏற்ப ஒரு கற்பனையாக விவரித்தார். அந்த உரையாடலில், "சீதையைத் தேடி ராமன் சென்ற பயணத்தின் போது, அவர் சாப்பிட்ட பழங்களுக்கு ராமன் பணம் செலுத்துவது போன்ற" கற்பனையான ஒரு காட்சியை அவர் சித்தரித்தார். பிரகாஷ் ராஜின் இந்த உரையாடல் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ஆந்திர மாநில பாஜக தலைவர் பானுபிரகாஷ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பிரகாஷ் ராஜின் பேச்சு இந்து சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மதக்கருத்துக்களைத் திட்டமிட்டே திரித்துக் கூறி சர்ச்சையை உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.

எனவே, பிரகாஷ் ராஜ் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து சமூகப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் விவகாரங்களில் தனது கருத்துக்களைத் தைரியமாகப் பதிவு செய்து வருபவர். இத்தகைய நிலையில், அவரது சமீபத்திய கருத்து மீண்டும் ஒரு தேசிய அளவிலான விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.