பயனர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த கடும் விமர்சனங்கள் மற்றும் சட்டரீதியான புகார்களைத் தொடர்ந்து, 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 'ChatGPT for Teens' என்ற புதிய பதிப்பை ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை? சமீபத்தில் சாட்ஜிபிடி தகவல்களைப் பின்பற்றி தாய் மற்றும் சகோதரரைக் கொன்றதாக இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஏஐ பரிந்துரையாள் 16 வயது சிறுவன் ஆடம் ரெய்ன் தற்கொலை செய்துகொண்ட வழக்கையும் ஓபன் ஏஐ எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க அரசு நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றத்தின் ஒழுங்குமுறை அழுத்தங்கள் அதிகரித்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பதிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்: சுய துன்புறுத்தல், வன்முறை, உணவுக் கோளாறுகள் மற்றும் பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • கற்றல் நேர முறை (Study Mode): கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடிப் பதில்களைத் தராமல், மாணவர்கள் பாடப் பொருளைப் புரிந்து கொள்ளும் வகையில் வழிநடத்தும்.

  • பெற்றோர் கண்காணிப்பு (Parental Control): பெற்றோர் தங்கள் கணக்கை பிள்ளைகளின் கணக்குடன் இணைத்து, பாதுகாப்பற்ற உரையாடல்கள் குறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம்.

  • சுய உணர்வுத் தடை: ஏஐ தனக்கென தனிப்பட்ட உணர்வுகளோ அல்லது சுய உணர்வோ இருப்பதாகக் கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், குரல் வழி உரையாடல் (Voice Mode) வசதி முடக்கப்பட்டுள்ளது.

  • திரை நேரக் கட்டுப்பாடு: பயன்பாட்டிலிருந்து இடைவேளை எடுப்பதற்கான நினைவூட்டல்கள் மற்றும் நேரக் கட்டுப்பாட்டு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சிறார்கள் ஏஐ தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக, ஆந்த்ரோபிக் (Anthropic) போன்ற பிற ஏஐ நிறுவனங்கள் தங்கள் தளங்களை வயது வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.