நீட் மறுதேர்வில் எவ்வித முறைகேடுகளும், வினாத்தாள் கசிவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், முதல்முறையாக வினாத்தாள்கள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமையின் (NTA) இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே ராஜஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த வினாத்தாள் கசிவுப் புகார் உறுதியானதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட நீட் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

இந்த முறைகேடு குறித்து சிபிஐ (CBI) வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் தொடர்புடைய பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர்கள் என இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த முறை எவ்வித குளறுபடிகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசும், தேர்வு முகமையும் தீவிரமாக உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் பேசியதாவது:

"நீட் மறுதேர்வை எவ்வித தங்குதடையுமின்றி, முழுப் பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, வினாத்தாள்கள் அனைத்தும் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன.

நாடு முழுவதும் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 18 முக்கிய விமான நிலையங்களுக்கு இந்த வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்குச் சென்றடையும்."

முன்னதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நீட் மறுதேர்வு வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப்படை (IAF) ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்படும் போது வினாத்தாள் கசிய வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், அரசின் இந்த விமானப் போக்குவரத்து மற்றும் தீவிர சிபிஐ கண்காணிப்பு நடவடிக்கை, தேர்வர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.