இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான 'முட்ட கலக்கி' பாடல் யூடியூபில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் வெளியான பாடல்களில், மிகக் குறுகிய காலத்தில் இந்த அசுர மைல்கல்லை எட்டிய முதல் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது.
நடிகர் கென் இயக்கி, கதையின் நாயகனாக நடித்து கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியான 'யூத்' திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. திரைப்படம் மற்றும் பாடல் என இரண்டுமே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரூ. 68 கோடி வசூல் சாதனை: திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யூத்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
கென்னின் பன்முகத்திறமை: இப்படத்தை இயக்கி, நடித்தது மட்டுமின்றி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த ‘முட்ட கலக்கி’ பாடலை எழுதி, பாடியதும் கென் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்
ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இதற்கு முன்னதாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ’ (Golden Sparrow) பாடலும் 200 மில்லியன் பார்வைகள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 'முட்ட கலக்கி' பாடலும் 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருப்பதால், ஜிவி பிரகாஷின் இசைப்பயணத்தில் இது மற்றொரு மகுடமாக இணைந்துள்ளது.
இந்திய அளவில் முதன்முறையாக ஒரு திரைப்படப் பாடல் இத்தகைய இமாலய சாதனையைப் படைத்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவினரையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.





