"தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர்கள்,

இணைப்பு விழாவில் புதிய நிர்வாகிகளை வரவேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "செய்யூர் தொகுதிக்கு திமுக ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். திமுக-வைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் எப்போதும் வேலை அதிகமாக இருக்கும். திமுகவில் இணைந்துள்ள பனையூர் பாபு, தான் முன்பு இருந்த இயக்கத்தைப் (விசிக) பற்றி மேடைகளில் விமர்சித்து பேச வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்:

"இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய அரசு பொறுப்பேற்றபோது, '6 மாதங்களுக்கு நாங்கள் எந்தப் பிரச்சினையையும் கிளப்பப் போவதில்லை, அரசுக்கு அவகாசம் தருவோம்' என்றுதான் நான் கூறியிருந்தேன். ஆனால், 6 மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே தற்போதைய அரசைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு வந்துவிட்டது."

"தற்போது அரசியல் களத்தில் பலரும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 6 மாதம் இல்லை, 5 மாதம் இல்லை, 4 மாதம் கூட இல்லை... தற்போதைய ஆட்சி '3 மாதங்களாவது தாங்குமா?' என்ற மிகப்பெரிய கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது" என மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமாகச் சாடினார்.

திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக-விலிருந்து பனையூர் பாபு விலகிய நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் இன்று அவர் திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.