இன்று (மே 1, 2026) முதல் நிதித்துறை மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த 6 முக்கிய மாற்றங்கள் இதோ
சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று முதல் சிங்காரச் சென்னை அட்டையை (Singara Chennai Card) பயன்படுத்தி மட்டுமே பயணிக்க முடியும். பழைய பயண அட்டைகளை வைத்திருப்பவர்கள், அதிலுள்ள தொகையை மெட்ரோ ரயில் செயலி மூலம் 'கியூ ஆா் ஸ்டோா்டு வேல்யூ பாஸ்' (SVP) அல்லது தேசியப் பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் ஹோட்டல் உணவுகளின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக பாதுகாப்பானதாக மாற்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இனி யுபிஐ (UPI), நெட் பேங்கிங் அல்லது கார்டு மூலம் பணம் அனுப்பும் போது ஓடிபி (OTP) மூலம் உறுதி செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஈபிஎஃப்ஓ (EPFO) 3.0 என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்களது யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்தி, வங்கிப் பரிவர்த்தனை போலவே மிக விரைவாக பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
வங்கிக் கணக்குகளில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ இனி பான் அட்டை (PAN Card) எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பணப்பரிமாற்றங்களைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் தொடர்பான பிரிவுகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இ-ஸ்போர்ட்ஸ் போன்ற சூதாட்டத் தன்மை கொண்ட விளையாட்டுகளில் ஈடுபட மே 1 முதல் கட்டாயப் பதிவு அவசியம் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

