இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கையிலுள்ள திரையரங்கிற்கு சென்ற நடிகர் சூரிக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தற்போது 3-வது வாரத்தைக் கடந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக (Housefull) திரையிடப்பட்டு வருகிறது.
ரூ. 150 கோடி வசூலை நோக்கி... தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள 'மண்டாடி' திரைப்படம், இதுவரை ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்த சில நாட்களில் இப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனையை எட்டும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.
இலங்கையில் சூரிக்கு 'முரட்டுத்தனமான' அன்பு: படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இலங்கைக்கு நேரில் சென்றுள்ள நடிகர் சூரி அங்குள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். முன்னதாக, வீதிகளில் திரண்டிருந்த இலங்கைத் தமிழர்கள் அவருக்குப் பூரிப்புடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து இறங்கி வந்த சூரி, ரசிகர்களின் அன்பை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
திரையரங்கில் ரசிகர்களிடையே பேசிய சூரி: "உலகம் முழுவதும் 'மண்டாடி' படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இலங்கையில் ஊர் ஊராகச் சென்று ரசிகர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து வருகிறேன். இங்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் வீடியோவைப் பார்த்தேன். சில படங்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என விநியோகஸ்தர் கூறினார். இலங்கை மக்களின் இந்த அளவு கடக்க முடியாத 'முரட்டுத்தனமான' அன்பை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.





