மலையாள திரையுலகின் இருபெரும் துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' (Patriot) திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் மம்மூட்டி ஒரு மேடையில் பகிர்ந்த உருக்கமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பேட்ரியாட்' திரைப்படம் வரும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் மம்மூட்டி, சமீபத்தில் வெளியான 'யூத்' (Youth) திரைப்படத்தின் வெற்றி விழாவில் சின்னத் தமிழா பேசியதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
இன்று நான் 'யூத்' படத்தின் வெற்றி விழா வீடியோவைப் பார்த்தேன். அதில் அந்தச் சிறுவன் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் நினைத்த நிலையில், இன்று அவர் அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது.
நாங்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்த பிறகுதான் நடிப்பைக் கற்றுக்கொண்டோம். ஆனால் அந்தச் சிறுவனுக்கு நடிப்பின் மீதும், சினிமாவின் மீதும் இருக்கும் அந்த ஆசை மற்றும் தேடல் இப்போதும் எனக்குள் இருக்கிறது. அவனுக்கு எந்தளவு சினிமா ஆசை இருக்கிறதோ, அதே அளவு ஆசை 70 வயதிலும் எனக்கும் இருக்கிறது."
மம்மூட்டி போன்ற ஒரு மூத்த கலைஞர், இளம் நடிகர் ஒருவரைப் பாராட்டிய விதம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. "பெரிய நடிகராக இருந்தாலும் தேடலை நிறுத்தாத மம்மூட்டியின் பண்பு வியக்க வைக்கிறது" என ரசிகர்கள் இக்காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.

