தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில், ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (ஜூன் 15) வரவு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக வழக்கமான தொகையே வந்துள்ளதால், தவெக தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அப்போது, முந்தைய திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் விஜய், "முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றி தொடரும்" என உறுதியளித்தார். அதன்படியே புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கான தொகையும் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஒரு சிறிய ஏமாற்றமும் நிலவுகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, "தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்" என முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வழக்கம்போல ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு விளக்கம்: கடந்த மாதமே முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்து, தொகையை உயர்த்தி வழங்க அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு எவ்வளவு காலம் ஆகும் அல்லது புதிய நடைமுறைகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பெண்கள் மத்தியில் எழும் கேள்வி: வழக்கமாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் 15ஆம் தேதியான இன்று, ஜூன் மாதத் தொகை கணக்கில் ஏறியுள்ளது. இதனால், "வழக்கம் போல ரூ.1,000 வந்துவிட்டதே என்று மகிழ்வதா? அல்லது வாக்குறுதி அளித்தபடி ரூ.2,500 இன்னும் வரவில்லையே என கலங்குவதா?" என்ற குழப்பத்தில் உரிமைத் தொகை பெறும் பெண்கள் உள்ளனர். தவெக அரசு விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.