இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியாகும் என படக்குழு முறைப்படி அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதைகளத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திரையரங்கு வெளியீடு தள்ளிவைப்பு: முன்னதாக, ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி காரணமாக, ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.