கேரளத்தில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கும் விதமாக, சுமார் 2,000 சட்டவிரோதக் கடன் செயலிகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
காலத்திற்கு ஏற்றவாறு உருமாறி வரும் இணையக் குற்றங்களைத் தடுக்க அரசு விரிவான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேரளத்தில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், இப்பட்டியலில் கேரளம் தேசிய அளவில் 3-வது இடத்தில் இருப்பது குறித்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அபின் வர்க்கி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. அபின் வர்க்கி:
"கேரளத்தில் கடந்தாண்டில் மட்டும் இணையக் குற்றங்களால் 42,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு ரூ. 814 கோடிக்கும் அதிகமாக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேலான இழப்புகள் போலி ஆன்லைன் வர்த்தக செயலிகள் மூலமாகவே நடந்துள்ளன. அபராதம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் என்ற பெயரில் இந்த நிதி மோசடிகள் தொடர்வதால், அரசு இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, இணையக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிட்டார்:
வழக்குப்பதிவு: ஒவ்வொரு மாவட்டத்திலும் இணையக் குற்றங்கள் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 318 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
செயலிகள் முடக்கம்: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்ட 1,836 கடன் செயலிகள் மற்றும் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் காவல்துறையினரால் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தீவிரம்: இணையம் சார்ந்த டிஜிட்டல் கண்காணிப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
"ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக நடைபெறும் நிதி மோசடிகளில் குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்" எனக் குறிப்பிட்ட அமைச்சர், இதனைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.





