'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை கயாடு லோஹர், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் வெளியான 'முகில்பேட்ட' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கயாடு லோஹர். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தோன்பதாம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லூரி', மராத்தியில் 'ஐ பிரேம் யு' எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
சமீபத்தில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் 'பல்லவி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் அடையாளத்தையும், பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.
'டிராகன்' பட ரிலீஸ் சமயத்தில் சமூக வலைதளங்களில் கயாடு லோஹர் ஒரு 'இணைய சென்சேஷன்' ஆக மாறினார். அவரது ரீல்ஸ் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவின.
மறுபுறம், "கயாடு லோஹர் தனக்குத் தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு, சுய விளம்பரம் (Self-Promotion) தேடிக்கொள்கிறார்" என்ற விமர்சனங்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டன.
சமீபத்தில் கயாடு நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. தற்போது அவரது அடுத்த படமான 'இதயம் முரளி' விரைவில் வெளியாகவுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில், "சமூக வலைதளங்களில் இருந்து எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ள கயாடு லோஹர், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





