பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று (மே 15) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலில் இந்தப் படம் மே 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வடமாநிலங்களில் ஒருசில இடங்களில் திட்டமிட்டபடி நேற்று வெளியான போதிலும், தமிழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் தர வேண்டிய பணப் பிரச்சினை காரணமாக, கடைசி நேரத்தில் படத்திற்குச் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முழுவதும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன

படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நேற்று வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது:

"ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் அன்றாடப் பிரச்சினைகளில் இருந்து விடுபடவே சினிமா பார்க்க வருகிறார்கள். ஆனால், படத்திற்கே இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விரைவில் பிரச்சினைகள் சரியாகி படம் வெளியாகும் என நம்புகிறேன்."

இந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்கப் பேசியது சூர்யா ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.