புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பட்டினப்பாக்கம் பகுதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தமிழக அரசு பதிலளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,
"தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?" எனத் தீவிரமான கேள்ியை எழுப்பியுள்ளார்.
பின்னணி என்ன?
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காகச் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதி இடம் தேர்வு செய்யப்பட்டு, அதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டதா, எதன் அடிப்படையில் மற்றும் எவ்வாறு அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
அரசிடமிருந்து வந்த அதிர்ச்சிப் பதில்!
இந்த ஆர்டிஐ கேள்விக்குப் பதிலளித்துள்ள தமிழக அரசு, "இது குறித்த தகவல் இப்பொது அதிகார அமைப்பில் இல்லை" எனத் தெரிவித்துவிட்டது. அதாவது, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆய்வு விவரங்களும் அரசிடம் இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
கனிமொழியின் கடும் விமர்சனம்:
தமிழக அரசின் இந்தப் பதிலைச் சுட்டிக்காட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
"புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார்கள்.
அப்படியானால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் ஜோசப் விஜய்யா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?"
என்று காட்டமாக வினவியுள்ளார்.
அரசுத் தரப்பில் முறையான ஆய்வுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு முக்கிய பொதுத் திட்டம் தொடர்பான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்ற விவாதத்தையும், தற்போதைய அரசின் நிர்வாக முறை குறித்தக் கேள்விகளையும் கனிமொழியின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பாகப் பற்றவைத்துள்ளது.





