தமிழக அரசு அறிவித்துள்ள ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பெயர் பலகை மற்றும் முன்னேற்பாடு செலவுகளைத் தலைமை ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் செய்யப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, 'காமராசர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விருதுநகரில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

சொந்த செலவில் செய்ய உத்தரவு?

இத்திட்ட விரிவாக்கம் மற்றும் பெயர் மாற்றத்திற்கான பலகைகள் அமைப்பது உள்ளிட்ட தேவைகளை, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மாற்றப்பட்ட பெயர் பலகையுடன் ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்து ஆதாரமாக அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் கடும் கண்டனம்:

ஆசிரியர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:

"நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு, பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தைக் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போர்டை மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்! இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்"

என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசு திட்டங்களுக்கான செலவை ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல என்றும், இதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசே உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.