டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 36 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட அமைப்பின் அனைத்து முதன்மை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, இந்த போராட்டம் முறைப்படி திரும்பப் பெறப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்களின் போராட்டத்திற்குப் பணிந்து நாட்டின் கல்வி அமைச்சரே ராஜினாமா செய்திருப்பது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பேசியபோது:
"தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். நீங்கள் அஞ்சாமலும், இந்த அரசாங்கத்திற்குத் தலைவணங்காமலும் இருந்தால், யாருடைய ராஜினாமா வேண்டுமானாலும் பெறலாம். ஜனநாயகத்தில் எப்போதும் பயப்படாதீர்கள்." என்று குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "என்னை ஹீரோவாக மாற்றி தவறு செய்யாதீர்கள். ஏற்கனவே ஒருவரை ஹீரோவாக மாற்றியதால்தான் நாடு சீரழிந்து கிடக்கிறது" என்றும் காரசாரமாகத் தெரிவித்திருந்தார்.
வைரலாகும் ஜோதிகாவின் பதிவு:
அபிஜீத் தீப்கே கூறிய "என்னை ஹீரோவாக மாற்றி தவறு செய்யாதீர்கள்..." என்ற வரிகளை நடிகை ஜோதிகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், ஜோதிகா மறைமுகமாக ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் என்றும், தற்போதைய அரசியல் சூழலை சுட்டிக்காட்டியே இப்பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் கூறி அப்பதிவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





