இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிப் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மற்றும் பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் தம்பதிக்குக் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இவர்களின் குழந்தைக்குப் பாலிவுட் நடிகர் அமீர்கான் 'மீரா' என்று பெயர் சூட்டினார். இந்த நிலையில், தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை வீணாக்காமல், அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்காக ஜுவாலா கட்டா தானமாக வழங்கியுள்ளார்.
தாய்ப்பால் தானத்தின் முக்கியத்துவம் குறித்து ஜுவாலா கட்டா தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
"நாம் தானமாக வழங்கும் வெறும் 100 மில்லி தாய்ப்பாலானது, 1 கிலோ அல்லது அதற்கும் குறைவான எடையுடன் பிறக்கும் ஒரு சிறிய குழந்தைக்குப் பல நாட்களுக்கு உணவாக அமையும். இந்தத் தானம் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) போராடும் பல குழந்தைகளுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும்."
மேலும், தாய்ப்பால் தானம் என்பது முற்றிலும் பாதுகாப்பானது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவச் சிக்கல்கள் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் பால் உடனடியாகக் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஜுவாலா கட்டா, "இந்தத் தானமாகப் பெறப்படும் பால், ஒரு குழந்தையின் ஆரம்பகால முக்கியமான நாள்களில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊட்டச்சத்தையும் வழங்கி, அவர்களின் உயிர் காக்கும் முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆதரவற்ற மற்றும் எடை குறைவாகப் பிறக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய ஜுவாலா கட்டாவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





