‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’ என்ற வசனத்துடன் நிறைவடைந்த ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதா? இல்லையா? என்பதைப் பார்ப்போம்.

கதைக்களம்: முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே ஜெயிலர் 2 கதையும் நகர்கிறது. குடும்பத்துடன் கோவை தடாகம் பகுதியில் வசித்து வருகிறார் ஜெயிலர் ரஜினி. டிரெய்லரில் காட்டியது போல, வர்மனைக் கொன்றவரைத் தேடுகிறது வர்மனின் கூட்டாளிகள் குழு. ஆனால், முதல் பாகத்தில் வர்மனுக்கு மேலே இருந்த முக்கிய புள்ளிகளை ஜெயிலர் கண்டுபிடிக்கவில்லை. இந்த இரண்டாம் பாகத்தில் அதைக் கையில் எடுக்கிறார் டைகர் முத்துவேல் பாண்டியன்.

ஜெயிலரைத் தேடும் வர்மனின் கூட்டாளிகள் அவரைப் பிடித்தார்களா? அல்லது ஜெயிலர் அவர்களைக் கண்டுபிடித்தாரா? இருவரும் எந்தப் புள்ளியில் சந்திக்கிறார்கள்? என்பதே ஜெயிலர் 2 படத்தின் கதை.

நகைச்சுவையும் முதல் பாதியும்: படத்தின் முதல் பாதி முழுக்க அதகளமும், நெல்சனுக்கே உண்டான தனித்துவமான நகைச்சுவையும் நிறைந்திருக்கிறது. மூர்த்தி கதாபாத்திரம் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. யோகி பாபு மற்றும் பியோர்ன் சுர்ராவ் கூட்டணி காமெடிக்குக் கைகொடுத்துள்ளது. குறிப்பாக, செஸ் விளையாட்டை வைத்து மூர்த்தி கதாபாத்திரம் செய்யும் லூட்டிகள் தியேட்டரை அதிர வைக்கிறது. சூரஜ் தனது உடல்மொழியால் முதல் பாதியில் பெரிதும் ஈர்க்கிறார். முதல் பாதி முழுவதும் ஜாலியாக நகர்ந்து மாஸாக முடிகிறது.

இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வரும் பாடல் சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், எத்தனை டெக்கேடுகள் ஆனாலும் ரஜினிதான் ரஜினி என்பதை நிருபித்துள்ளார். பெரிய சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே தனது அசாத்தியமான ஆரா (Aura) மூலம் மாஸ் எலிவேஷன் உணர்வைத் தந்து அசத்துகிறார் ரஜினி. இசையமைப்பாளர் அனிருத், ரஜினி படத்திற்குத் தேவையான தெறிக்கவிடும் பின்னணி இசையைச் கச்சிதமாகக் கொடுத்துள்ளார்.

இரண்டாம் பாதியும் எமோஷன்களும்: இரண்டாம் பாதியில் கதைக்களம் வேறு இடத்திற்கு நகர்கிறது. முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இது வழக்கமான ஜெயிலர் படத்துக்கான டெம்ப்ளேட்டிலேயே பயணிக்கிறது. படம் மாஸாக இருந்தாலும், எமோஷன்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். மகனைக் கொன்ற தந்தை குறித்த உண்மைகள் வெளிவரும் தருணம் எதிர்பார்த்த அளவுக்கு எமோஷனலாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

இருப்பினும், ரஜினியின் திரை ஆளுமை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. பிறந்தநாள் பார்ட்டியில் காட்டும் மாஸ் மற்றும் வித்யா பாலனிடம் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தில் வித்யா பாலனின் கதாபாத்திரம் கதைக்குச் சிறப்பாகவே வலு சேர்த்துள்ளது. எனினும், அவருடைய காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் இடமளித்திருக்கலாம். ஆனால், வித்யா பாலனின் கதாபாத்திரத்தைக் கொண்டு மூன்றாம் பாகத்தில் வெயிட்டான ஒன்றைச் செய்ய இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம்.

மொத்தத்தில், லாஜிக்கை தாண்டி ரஜினியின் மாஸுக்காகவும், கலகலப்பான காமெடி காட்சிகளுக்காகவும் குடும்பத்துடன் தியேட்டரில் சென்று ரசிக்கலாம் இந்த ஜெயிலர் 2.