லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தகக் கப்பல்களும் செல்ல ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 10 நாட்களுக்கு மட்டுமே இந்த அனுமதி செல்லுபடியாகும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இயல்பான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்த முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் முழுவதுமாக முடக்கியிருந்தது.
ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லெபனானின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இப்போரில் இணைந்தனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

