இன்றைய காலகட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள் 500 கோடி, 1000 கோடி ரூபாய் வசூல் செய்வதை நாம் சாதாரணமாகப் பார்த்து வருகிறோம். ஆனால், இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக '1 கோடி ரூபாய்' வசூல் செய்து இமாலய சாதனை படைத்த முதல் திரைப்படம் எது தெரியுமா? அதுதான் 1943-ஆம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ (Kismet).
சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய திரையுலகின் போக்கையே மாற்றியமைத்த இந்த பிளாக்பஸ்டர் காவியம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் இதோ
'பாம்பே டாக்கீஸ்' நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான 'கிஸ்மத்' திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ. 2 லட்சம் மட்டுமே. தியேட்டர்களில் வெளியான இந்தத் திரைப்படம், அதுவரை இந்திய சினிமாவில் இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் தூள் தூளாக்கியது. அந்த காலக்கட்டத்திலேயே 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு குபேர நதியாக மாறியது.
இத்திரைப்படத்தின் மீதான கிரேஸ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருந்தது என்றால், கொல்கத்தாவின் புகழ்பெற்ற 'ராக்ஸி சினிமாஸ்' (Roxy Cinemas) தியேட்டரில் மட்டும் தொடர்ந்து 3 ஆண்டுகள் 8 மாதங்கள் (மொத்தம் 192 வாரங்கள்) ஓடி சாதனை படைத்தது. வாரக்கணக்கில் தியேட்டர்களின் முன்பு 'ஹவுஸ்ஃபுல்' போர்டுகள் மட்டுமே தொங்கின. இந்த அசுர சாதனையை அடுத்த 32 ஆண்டுகளுக்கு எந்தவொரு இந்திய சினிமாவாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, இந்திய சினிமாவின் கதாபாத்திர வடிவமைப்பிலும் இத்திரைப்படம் புரட்சியை ஏற்படுத்தியது. அதுவரை இந்தியத் திரையுலகில் கதாநாயகன் என்றால் நேர்மையான, ஒழுக்கமானவராக மட்டுமே காட்டப்பட்டு வந்த பிம்பத்தை 'கிஸ்மத்' உடைத்தெறிந்தது.
இதில் முன்னணி நடிகர் அசோக் குமார் ஒரு பிக்பாக்கெட் திருடனாக, அதாவது பாலிவுட்டின் முதல் 'ஆண்டி-ஹீரோ' கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இவருடைய ஸ்டைலான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, இவரை நாட்டின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' உயர்த்தியது.
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, அவர்களின் சென்சார் போர்டின் கண்களில் மண்ணைத் தூவி, இந்தியர்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டும் ஒரு தேசபக்தி பாடலும் இதில் இடம்பெற்றிருந்தது. கவிஞர் பிரதீப் எழுதிய "தூர் ஹட்டோ ஐ துனியா வாலோ, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹை" (உலக மக்களே தள்ளிப் போங்கள், ஹிந்துஸ்தான் எங்களுடையது) என்ற பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறியது.
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் என்பதால், பிரிட்டிஷ் அரசை ஏமாற்ற, பாடலின் வரிகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராக இருப்பது போல் கவிஞர் மிகச் சாமர்த்தியமாக எழுதினார். இதனால் ஆங்கிலேய அரசு இப்பாடலின் உள்நோக்கத்தை அறியாமல், தடை செய்யாமல் தியேட்டர்களில் ஒலிக்க அனுமதித்தது.
புதுமையான திரைக்கதை, அசோக் குமாரின் மிரட்டலான நடிப்பு, பிரிட்டிஷாரையே அதிரவைத்த தேசபக்தி மற்றும் சிறந்த இசை ஆகியவற்றின் மூலம் 'கிஸ்மத்' திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் என்றும் அழியாத ஒரு காவியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.





