இளையராஜாவின் இசை மேதைமை மற்றும் நுணுக்கங்களைப் பற்றி எழுத வேண்டுமென்றால், அவரது வற்றாத இசைக் களஞ்சியத்தைக் கேட்டு லயித்திருக்க வேண்டும். இயக்குநர்கள் கதையை எழுதிவிட்டு ராஜாவிடம் செல்வது ஒரு காலம் என்றால், ராஜாவிடம் வாங்கிய 5 பாடல்களுக்காகவே ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் கதையை எழுதினார் இயக்குநர் சுந்தரராஜன். பாடல்களால் மட்டுமே உயிர்பெற்ற பல படங்கள் தமிழ் சினிமாவில் உண்டு.
பல நூறு இயக்குநர்களுடன் பணியாற்றிய இளையராஜா, ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தருடன் முதன்முறையாக இணைந்த காவியம் தான் ‘சிந்து பைரவி’. கர்நாடக இசையில் சில மீறல்களைச் செய்து, பாமர மக்களும் அதனை ரசிக்கும் விதத்தில் ராஜா இப்படத்தில் நிகழ்த்திய இசை மாயாஜாலங்கள் இதோ:
1. மஹா கணபதிம் (ராகம்: நாட்டை)
வழக்கமாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால், இப்படத்தில் மிருதங்க வித்வான் (தில்லி கணேஷ்) குடிபோதையில் இருந்ததால் அவரைத் துரத்திவிட்டு, மிருதங்கம் இல்லாமலேயே வயலினை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி, ஜேசுதாஸின் கம்பீரக் குரலில் இப்பாடலை மெருகேற்றியிருப்பார் ராஜா.
2. மரி மரி நின்னே (ராகம்: சாரமதி)
தியாகராஜரின் இந்த புகழ்பெற்ற கீர்த்தனை மூலத்தில் ‘காம்போதி’ ராகத்தில் அமைந்தது. ஆனால், இசை மரபுகளை உடைத்து இதனை ‘சாரமதி’ ராகத்தில் அமைத்து ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கச் செய்தார் ராஜா. இது அப்போதைய சங்கீத மேதைகளிடம் எதிர்ப்பைப் பெற்றாலும், இசையில் இளையராஜா ஒரு கலகக்காரன் என்பதை நிரூபித்த இடம் இது.
3. பாடறியேன் படிப்பறியேன் (ராகம்: சாரமதி)
மேற்கூறிய அதே சாரமதி ராகத்தில், கர்நாடக சங்கீதத்தை நாட்டுப்புற இசையுடன் (Folk) கலந்து பாமரருக்கும் புரியும் வகையில் சிந்து (சுஹாசினி) பாடும் பாடலிது. கதாபாத்திரங்களின் உறவு சார்ந்த மீறலுக்கான குறியீடாகவும் அமைந்த இப்பாடலைப் பாடியதற்காக பாடகர் சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது.
4. மனதில் உறுதி வேண்டும் (ராகம்: திலங்)
பாரதியாரின் இந்த வரிகளை, கடற்கரையில் அமர்ந்து கடலின் ஓசையையே தாளமாக்கி ஜே.கே.பி பாடுவதாக அமைத்திருப்பார். கர்நாடக இசை திலங் ராகத்தின் மூலம் பாமர மீனவரையும் சென்றடைவதை இக்காட்சி உணர்த்தும்.
5. நானொரு சிந்து (ராகம்: சிந்து பைரவி)
கருணை, சோகம், ஏக்கத்தை வெளிப்படுத்தும் 'சிந்து பைரவி' ராகத்தில் அமைந்த இப்பாடல், பல ஆண்டுகளுக்கு முன் இழந்த தனது தாயைப் பார்த்த கனத்தில் சிந்து பாடுவதாக, சித்ராவின் உருக்கமான குரலில் ஒலிக்கும்.
6. மோகம் என்னும் தீயில் (ராகம்: கனகாங்கி)
பாடல் அமைக்க ஏதுவானதல்ல என்று கருதப்படும் 'விவாதி' ராகங்களில் ஒன்றான 'கனகாங்கி' ராகத்தில் இப்பாடலை அமைத்திருப்பார். ஜே.கே.பி தனது மோகத்தைத் தவிர்க்க கொந்தளிக்கும் கடலின் முன் பாடும் இப்பாடலுக்குப் பின், தமிழ் திரையில் எவரும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியதில்லை.
7. பூமாலை வாங்கி வந்தான் (ராகம்: கானடா)
ஒரு கலைஞனின் வீழ்ச்சியையும், அவனின் மனச்சிக்கலையும் இசையாலும் வரிகளாலும் அழுத்தமாகக் கூறிய பாடல். 'கானடா' ராகத்தில் ஜேசுதாஸின் குரலில் மென்சோகத்தையும், இரக்கத்தையும் தூண்டும் விதத்தில் ராஜா இதை அமைத்திருப்பார்.
8. தண்ணி தொட்டி தேடி வந்த... (ராகம்: காபி)
மதுவுக்கு அடிமையான ஜே.கே.பி-யை டப்பாங்குத்து பாடச் சொல்லும் போது பாடும் பாடல். 'காபி' ராகத்தில் ஒரு துள்ளலான டப்பாங்குத்து பாடலை அமைத்து, அதிலும் கலைஞனின் சோகத்தைக் கடத்திய பெருமை இளையராஜாவையே சேரும்.
9. கலைவாணியே (ராகம்: கல்யாணி)
வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து ஜே.கே.பி மேடையில் பாடும் பாடல். திருந்திய கலைஞன் பாடும் பாடல் என்பதால், ராகத்தில் கீழிறங்காமல் இருக்க முழுக்க 'ஆரோகண பிரயோகத்தில்' வருமாறு 'கல்யாணி' ராகத்தில் ராஜா இதை அமைத்திருப்பார்.
தேசிய விருதுகள்: இப்படத்திற்காக இளையராஜா (இசை), சித்ரா (பின்னணிப் பாடகர்), சுஹாசினி (நடிப்பு) ஆகிய மூவருக்கும் தேசிய விருது கிடைத்தது.
பிலஹரி ராகத்தில் 'டப்பாங்குத்து'!
சிந்து பைரவி மட்டுமின்றி, மகிழ்ச்சியைக் குறிக்கும் மென்மையான 'பிலஹரி' ராகத்தை, கமல் ஹாசனின் ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் ‘மாமன் வீடு மச்சு வீடு’ என்ற அதிரடி டப்பாங்குத்து பாடலாக மாற்றியிருப்பார் ராஜா.
நம்மில் பலரும் அது கர்நாடக சங்கீதம் என்று தெரியாமலே இன்று வரை ராஜாவின் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். கலையைப் பரவலாக்கி அனைவரிடத்தும் சேர்த்த அந்த இசைப் பேரரசனை, புது இசையைப் படைக்கும் கடவுளாகவே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்!





