இந்தியா மற்றும் இலங்கை இடையேயான நீண்டகால மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் அவ்வாறு நுழையும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தப் பேச்சுவார்த்தை நாளை (செப். 25) இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.

இந்தியத் தரப்பு வேண்டுகோள்:

எனினும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சு விளக்கம்:

இது குறித்து கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாவது:

"பேச்சுவார்த்தைக்கான புதிய திகதியை இந்தியத் தரப்பு பின்னர் அறிவிக்கும். அது கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவின் விவரங்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கைத் தரப்பினால் இரத்து செய்யப்படவில்லை; இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது" எனத் தெளிவுபடுத்தியுள்ளது.