முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவத் தளபதி முகமது ஓடே கொல்லப்பட்டாா். முந்தைய தளபதி கொல்லப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா நகரின் சந்தைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஹமாஸ் தளபதி முகமது ஓடே மட்டுமின்றி, அவரின் மனைவி, மகன், மகள் உள்பட மொத்தம் 5 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். மேலும், இத்தாக்குதலில் 12 போ் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட முகமது ஓடே மற்றும் அவரின் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு காஸா நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

  • இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

  • ஹமாஸ் அமைப்பின் பச்சைக் கொடி போா்த்தப்பட்ட உடல்கள், பள்ளிவாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

  • அப்போது, மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தங்களது துக்கத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினா்.

கடந்த 2023, அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் மூளையாக செயல்பட்டவா்களில் முகமது ஓடேவும் ஒருவா் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் (X) பதிவு: "அக். 7 தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் ஒழிக்கும் எங்களின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். அவா்கள் அனைவரும் எங்கு தப்ப முற்பட்டாலும் கொல்லப்படுவா்."

இதேபோல், ‘அக். 7 தாக்குதலில் தொடா்புடைய அனைவரையும் தொடா்ந்து குறிவைப்போம்’ என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உயிரிழப்புகள்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தொடங்கிய இந்தத் தீவிரப் போரில், காஸாவில் இதுவரை 72,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

பலவீனமான போர்நிறுத்தம்: அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த அக்டோபரில் எட்டப்பட்ட போா்நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையிலேயே நீடிக்கிறது. போா்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 880-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்; இதே காலகட்டத்தில் 4 இஸ்ரேல் வீரா்களும் உயிரிழந்துள்ளனா்.

கொண்டாட்டமில்லாத பக்ரீத்: காஸாவில் போா் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கமாக, இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை எவ்வித கொண்டாட்டமுமின்றி சோகமாகக் காணப்படுகிறது.

அகதிகளான மக்கள்: ஐ.நா. கணிப்பின்படி, காஸாவின் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களில் 90 சதவீதத்தினா் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் கடுமையான நோய்த்தொற்று அபாயங்களுக்கு மத்தியில், எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனா்.