தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சுமார் 10 பேர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
தலைமையகத்தில் நடந்த இணைப்பு விழா:
சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ மற்றும் பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு:
முன்னாள் அமைச்சர்களுடன் சேர்த்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளனர். அதன் விவரம்:
பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி
சங்ககிரி சுந்தரராஜூ
வீரபாண்டி ராஜமுத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜூ
கலசப்பாக்கம் பன்னீர்செல்வம்
சிவகாசி ராஜவர்மன்
ஆற்காடு வி.கே.ஆர்.சீனிவாசன்
அதிமுகவினர் மட்டுமின்றி, திமுகவின் முன்னாள் எம்எல்ஏவான ஜெ. கருணாநிதியும் இன்று தவெகவில் இணைந்துள்ளார். இவர்களுடன் சேர்த்து அதிமுகவின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் முக்கியத்துவம்:
அண்மையில்தான் அதிமுகவைச் சேர்ந்த 4 நடப்பு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் தவெகவை நோக்கி படையெடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





