2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் இன்று (அக். 13) அதிரடியாக அறிவித்துள்ளார்.

முழுநேரக் கட்சிப் பணியாற்றுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.

5 பக்கங்கள் அடங்கிய அந்த நீண்ட கடிதத்தில், மத்திய இணை அமைச்சர் பொறுப்புடன் சேர்த்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் (MP) பதவியில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சிப் பணிக்குத் திரும்பும் தலைவர்கள்

இதற்கு முன்பும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகப் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத் தீவிர கட்சிப் பணியில் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து தற்போது எல். முருகனும் அரச பதவிகளைத் துறந்து முழுநேர அரசியல் மற்றும் கட்சிப் பணிக்குத் திரும்பியுள்ளார்.

'எக்ஸ்' தளத்தில் எல். முருகன் உருக்கமான பதிவு:

தனது ராஜிநாமா குறித்து தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எல். முருகன்:

"பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் பாரதத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றுவதை என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

ஒரு தினக்கூலியின் மகனாக இருந்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று பிரதமரின் வழிகாட்டுதலின்படி நாட்டிற்குச் சேவையாற்றியதைச் சிறந்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

தற்போது நான் மீண்டும் களப்பணிக்குத் திரும்பி, 2029 மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

'நாட்டின் நலனே முதன்மை; கட்சி அதற்கு அடுத்தது; இறுதியாகத்தான் எனது நலன்'"

— எனக் குறிப்பிட்டுள்ளார்.