தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்த மாபெரும் இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல், இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள காட் ரோடு பண்ணைத் தோப்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இயக்குநர் பாரதிராஜா, நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு மனைவி சந்திரலீலா மற்றும் மகள் ஜனனி உள்ளனர். முன்னதாக, அவரது மகன் மனோஜ் மறைவுக்குப் பின் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று இரவு அங்கிருந்து வாகனம் மூலம் தேனிக்குக் கொண்டு வரப்பட்டது.

தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று பிற்பகலில் இறுதிச் சடங்குகள் தொடங்கப்பட்டு, பின்னர் அவரது உடல் ஊர்வலமாக தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்புக்குக் கொண்டு வரப்பட்டது.

திரையுலகிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழக அரசு அவருக்கு அரசு மரியாதை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் வன்னி அரசு ஆகியோர் நேரில் வருகை தந்து, மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜாவுக்குச் சொந்தமான பண்ணைத் தோப்பில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பாரதிராஜாவின் மகள் ஜனனி மற்றும் அவரது சகோதரர் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இவர்களுடன் இயக்குநரின் நெருங்கிய நண்பர்களான இயக்குநர் பாக்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த உயரிய கௌரவத்துடன், தமிழ் சினிமாவின் இமயமாய் விளங்கிய இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் மறைவு, தேனி மாவட்ட மக்களிடையேயும் ஒட்டுமொத்த திரைத்துறையினரிடையேயும் ஈடுசெய்ய முடியாத பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.