தில்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் திறந்தவெளி வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், அது ஆணின் உடல் என முதற்கட்டமாக காவல்துறையினர் தவறாகக் கருதிய நிலையில், பிரேத பரிசோதனையில் அது சிறுமியின் உடல் என்பதும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்த உடல்:
ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள வயல்வெளியில் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது:
உடல் முற்றிலும் அழுகி, எலும்புகள் வெளியே தெரிந்தது.
வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், உடல் உறுப்புகள் கடுமையாக நசுக்கப்பட்டிருந்தன.
முகம் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருந்தது.
உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாலும், பிறப்புறுப்புப் பகுதி கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்ததாலும், அது ஒரு நடுத்தர வயது ஆணின் உடல் என்றும், ஆணின் பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் காவல்துறையினர் கருதினர்.
பச்சை குத்தப்பட்ட '3 நட்சத்திரங்கள்':
இருப்பினும், உடற்கூராய்வு (Post-mortem) முடிவிலேயே கண்டெடுக்கப்பட்ட உடல் ஒரு பெண்ணுடையது என்பதும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. பெண் நீல நிற ஜீன்ஸ் மற்றும் ஊதா நிற மேலாடை அணிந்திருந்தார்.
உடல் முற்றிலும் அழுகியிருந்ததால் முகத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை. தொடர்ந்து உடலை ஆய்வு செய்தபோது, கையில் ஓரிடத்தில் மூன்று நட்சத்திரங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காணாமல் போன பெண்கள் குறித்துப் புகார் அளித்த குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு குடும்பத்தினர் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணின் கையிலும் இதேபோன்று 3 நட்சத்திரங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது உறுதியானது. இதன் மூலம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன அந்தச் சிறுமிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்பதால், சிறுமியின் துல்லியமான வயதை அவர்களால் தெரிவிக்க இயலவில்லை. அவருக்கு 15 முதல் 17 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சி மூலம் 4 பேர் கைது:
கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு வயலில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு டெம்போ வாகனம் வந்து சென்றது கண்டறியப்பட்டது.
அந்த டெம்போ வாகனத்தின் ஓட்டுநரைப் பிடித்து நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறார்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்





