ஐபோனுக்கான மாதத் தவணையை (EMI) செலுத்த முடியாமல் ஏற்பட்ட தீவிர மன அழுத்தத்தால், யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 30 வயது நபரை காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

தென்கிழக்கு டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள போலா காட் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஆற்றில் ஒருவர் தத்தளிப்பதைக் கண்டு உடனடியாக வெள்ளத் தடுப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் படகு மூலம் அவரைப் பத்திரமாக மீ மீட்டனர்.

விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்:

மீட்கப்பட்டவர் ஓக்லா சஞ்சய் காலனியைச் சேர்ந்த தீபக் குமார் (30) எனத் தெரியவந்துள்ளது. நடன ஆசிரியரான இவர், தோட்டப் பணிகளையும் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால், தான் கடனில் வாங்கிய ஐபோனுக்கான EMI தொகையை கட்ட முடியாமல் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாகவே அவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் கவுன்சிலிங்:

உயிருடன் மீட்கப்பட்ட தீபக் குமாருக்குக் காவல்துறையினர் உரிய மனநல ஆலோசனைகளை (Counseling) வழங்கினர். பின்னர், அவரது மனைவி மற்றும் மைத்துனரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, தீபக் குமாரை அவர்களுடன் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.