ஆப்ரிக்க நாடான காங்கோவில் அரியவகை 'எபோலா' (Ebola) வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு காங்கோ பகுதியில் கடந்த மே 15 அன்று இந்த அரியவகை எபோலா வைரஸ் தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. குறுகிய நாட்களிலேயே இதன் பரவல் வேகம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கும் விதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
பாதிப்பு நிலவரம் குறித்து காங்கோ நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்:
"தற்போது வரை 513 பேர் இந்த எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பலியான அனைவரும் இந்த வைரஸ் தொற்றால் தான் இறந்தார்களா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது," என்றார்.
தற்போது காங்கோவில் பரவி வருவது எபோலா வகைகளிலேயே மிகவும் அரிய வகையான 'பண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரியவகை வைரஸுக்கு இதுவரை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளோ அல்லது முறையான தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது.
காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா பகுதிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட எபோலா வைரஸ் பரவல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பண்டிபுக்யோ வகை வைரஸ் பரவல் கண்டறியப்படுவது இது 3-வது முறை மட்டுமே ஆகும்.
காங்கோவின் பல நகரங்களுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, மே 17 அன்று உலக சுகாதார அமைப்பு எபோலா வைரஸ் பரவலை 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக' (PHEIC) அறிவித்தது.
இந்தச் சூழலில், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த ஐ.நா.வின் சுகாதார அமைப்பு (WHO) தனது அவசரகாலக் குழுவை இன்று கூட்டியுள்ளது. உலக நாடுகளின் கூட்டு முயற்சியுடன் மட்டுமே இந்த அரியவகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





