கோயம்புத்தூர் அருகே சூலூர் பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள குளக்கரை பகுதியில் இருந்து சிறுமியின் சடலத்தைக் காவல் துறையினர் மீட்டனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் இரவு முழுவதும் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வழக்கை விரைந்து விசாரித்த காவல் துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், கார்த்திக் என்பவருடன் சிறுமி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனடிப்படையில் கார்த்திக்கைப் பிடித்து காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொடூரக் குற்றத்திற்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தகுந்த தண்டைனையைப் பெற்றுத்தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.