அதிகாரம் செய்கிறவர்களும், ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா?" என்று தான் கோட் - சூட் அணிவது குறித்து விமர்சிப்பவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் தனது உடை நாகரிகம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய்:
"நாம் கோட் - சூட் எல்லாம் போட்டுகொண்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஏன் நாமெல்லாம் கோட் - சூட் போடக் கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் - சூட் போட வேண்டுமா?
நான் போடும் இரண்டே நிறம் நம்முடைய மனசு மாதிரி கருப்பு - வெள்ளை (Black & White). எல்லாவற்றிலும் கருப்பு - வெள்ளை போலவே நேர்மையாக நான் இருப்பேன் என்பதற்குத்தான் இந்த நிற உடை. அந்த கருப்பு நிறம் யாரைக் குறிக்கும் என்று உங்களுக்கே தெரியும்."
மக்களை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், "நீங்கள் தற்குறி, தற்குறி என்று கூறியவர்கள்தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?" என்று அனல் பறக்க கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தனக்கு வாக்களித்த தொகுதி மக்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார்:
இரு கண்கள்: பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி.
செல்லப்பிள்ளை: இதில் திருச்சி கிழக்கு தொகுதி எப்போதும் என் செல்லப்பிள்ளை மாதிரி.
இடைத்தேர்தல் அறிவிப்பு: "வரப்போகும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே இங்கு வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். என்னை எப்படி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்களோ, அதேபோல இடைத்தேர்தலில் நிற்கப்போகும் அவரையும் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் இந்த ஆவேசமான மற்றும் நெகிழ்ச்சியான பேச்சு திருச்சி பகுதி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





